பொலிசாருக்கு கிடைத்த தகவலால் சுற்றுலா பயணிகள் வாகனம் சோதனை!!

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள சிலர் மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற வாகனத்தில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவம் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இனந்தெரியாத நபரினால், 119 அவசர இலக்கத்தினூடாக குறித்த வானின் இலக்கம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு, அந்த வானில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதுடன் வானிலும் தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பொலிஸார் அங்கிருந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று திரும்பிச் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார.

அத்தோடு, அவர்கள் வந்த வான் பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு சோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவிலிருந்து யாழ். குடாவுக்கு வந்தவர்கள் மட்டக்களப்புக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த அவர்கள், நேற்று உல்லைப பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.

இதன்போது காத்தான்குடி பகுதியில் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்துகொண்டிருந்தபோது, வெளிநாட்டில் இருந்து வந்த பெண்களின் ஆடை தொடர்பாக சிலர் அங்கு கருத்து வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுடன் குறித்த குழுவினர் முரண்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor