எக்னொலிகொட வழக்கு மூன்று நீதிபதகளின் முன் விசாரணை

கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில்(றையல் அற் பார்) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்டமா அதிபரினால் பிரதம நீதியரசருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக குறித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு இந்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி, இரவு 8 மணியளவில் கொழும்பு- கொஸ்வத்தை என்ற இடத்தில் வைத்து, பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனதாக போலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது.

பிரகீத் எக்னெலிகொடவை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரே கடத்தியதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனாலும் இந்த குற்றச்சாட்டுக்களை மஹிந்த தரப்பினர் மறுத்து வருகின்றனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன நாள் முதல் இன்று வரை பன்னாட்டு நிறுவனங்கள், சுயாதீன அமைப்புக்கள் அவருக்காக குரல் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 


Recommended For You

About the Author: ஈழவன்