மாலைத்தீவில் தூதரகம் அமைக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு!

தெற்காசிய தீவு நாடான மாலைத்தீவில் தூதரகம் அமைக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மாலைத்தீவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ இந்த அறிவிப்பினை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,’மாலத்தீவு தலைநகர் மாலியில் அமெரிக்கத் தூதரகம் அமைக்க முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு 1966ஆம் ஆண்டு தொடங்கியது. அன்றிலிருந்து ஜனநாயக அமைப்புகளை மாலத்தீவு மேம்படுத்தி வருகிறது.

அங்கு தூதரகம் அமைத்து, மண்டல பாதுகாப்புப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் ஒருங்கிணைந்து செயற்படுவோம்’என கூறினார்.

தற்போது மாலைத்தீவுக்கான தூதரக சேவைகள் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் நோக்கில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு வருகின்றார்.

இதன் ஒரு கட்டமாகவே அவர் மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.


Recommended For You

About the Author: Editor