கிளிநொஞ்சியில் சட்டவிரோத மண் அகழ்வு

கிளிநொச்சி தருமபுரம் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அரச அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுத்தப்பட்ட உழவு இயந்திரத்துடன் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், கிராம அலுவலர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் கல்லாறுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு உழவு இயந்திரத்துடன் அதன் சாரதியை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவது தொடர்பாக பிரதேச செயலாளர், கிராம அலுவலர் மற்றும் கிராம மட்ட பொது அமைப்புக்களாலும் பொதுமக்களாலும் பொலிஸாருக்கு பல தடவை தகவல்களை வழங்கியபோதும் பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்யாத நிலையே தொடர்ந்து காணப்பட்டது.

அங்கீகரிக்கப்படாத இடங்களில் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள் மிக மோசமாக பாதிப்படையக் கூடிய நிலை காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த மாதம் 18ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது சட்டவிரோத மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அதனடிப்படையில் எதிர்காலத்தில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் முக்கிய இடங்களில் பொலிஸ் காவலரண்களை அமைப்பதாகவும் பொலிஸார் உறுதியளித்தபோதும் இதுவரை எந்த இடங்களிலும் காவலரண்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்