
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா காலத்தில் இராணுவம் சப்பாத்து, துப்பாக்கியுடன் ஆலய வளாகத்தில் நுழைந்து தமிழர்களை சோதிப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஆலய நிர்வாகமோ, பக்தர்களோ பாதுகாப்பு கோராத நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதி செய்துவிட்டதாக கூறும் அரசு, வடக்கில் மட்டும் ஏன் கெடுபிடிகளை மேற்கொள்கிறது என்றும் கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா தமிழர்களின் அடையாள நிகழ்வாக கருதப்படுகின்றது. இதுவரை ஆலயத்திற்குள் செல்பவர்களை பரிசோதனை செய்ததாக வரலாறு இல்லை.
சீருடை தரித்த இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பையும், மக்களை அசௌகர்யத்திற்கு உள்ளாக்கும் நிலைமைகளையும் ஏற்றுகொள்ள முடியாததாகும்.
ஆலய நிருவாகமும் சரி, பொதுமக்களும், வேறு எவரும் இவ்வாறு பாதுகாப்பு கேட்கவில்லை. தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்திவிட்டதாக கூறும் அரசாங்கம் வடக்கில் மட்டும் ஏன் இவ்வாறு கெடுபிடிகளை கையாள்கின்றது என்பது தெரியவில்லை.
யாழ்ப்பாணம் நல்லூர் கலாசார புனித பூமி. அங்கு எமது கலாசாரத்தை நாசமாக்கும் வகையில் இராணுவம் நடந்துகொள்கின்றது. பிரதமரும்ஈ அரசும் இதில் உடனடியாக தலையிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.