50 பேர் ஈராக்கில் காயம்!

ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களினால் சுமார் 50பேர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் மற்றும் மருத்துவ ஆதாரங்களை மேற்கோளிட்டு ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் ஓராண்டு நிறைவு விழாவில் ஆயிரக்கணக்கானோர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தின்போது கொல்லப்பட்டவர்களின் உருவப்படங்கள் பொறித்த கொடிகளை ஏந்தியவாறு அரசாங்கத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஸ்ரா, நஜாப் மற்றும் நசிரியா உள்ளிட்ட தெற்கில் பல நகரங்களில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

பாக்தாத்தில், பாதுகாப்புப் படையினர் கூட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். பதிலுக்கு சில எதிர்ப்பாளர்கள் கற்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளை பொலிஸ் மீது வீசினர்.

பாக்தாத் மற்றும் நாட்டின் தெற்கில் அரசாங்க ஊழல், மோசமான சேவைகள் மற்றும் அதிக வேலையின்மை ஆகியவற்றைக் குறைக்க பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் வீதிகளில் இறங்கி கடந்த ஆண்டு முதல் போராடி வருகின்றனர்.

ஈராக்கின் ஆளும் வர்க்கம் தங்கள் நாட்டில் ஈரானிய தலையீட்டை அனுமதிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு கடைசி சுற்று ஆர்ப்பாட்டங்களின் போது, ஈராக்கிய படைகள் கூட்டத்தை கலைக்க நேரடி வெடிமருந்துகளையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தியதால், நாடு தழுவிய மோதல்களில் சுமார் 600 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 30,000பேர் காயமடைந்தனர்.


Recommended For You

About the Author: Editor