சிறுமி பாலியல் துஷ்பிரயோக கான்ஸ்டபிளுக்கு 15 வருட சிறைத்தண்டனை!

மட்டக்களப்பு – வெள்ளாவெளி பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி N.M.M. அப்துல்லா இன்று இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வெள்ளாவெளி பகுதியில் 13 வயது சிறுமியை 21 வயதான அம்பாறையை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

சுற்றிவளைப்பு கடமையின் போது துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையால், 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளிக்கு 5000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 06 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும், அதனை செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிடப்பட்டது.


Recommended For You

About the Author: Editor