ஆங்கிலம் துணுக்குகள்

ஆங்கிலம் துணுக்குகள் (with my eyes closed)

சர்மிலனின் வீட்டடியில் ஒருவரின் மகிழுந்து பழுதடைந்துவிட்டது. பக்கத்தில் வாகனத் திருத்தகங்களும் இல்லை.

மகிழுந்தில் வந்தவருக்கோ எங்கோ எதற்கோ அவசரமாக செல்லவேண்டிய நிலை. மகிழுந்து திடீரென பழுதடைந்து விட்டதால் ஒன்றும் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த சர்மிலனின் மாமா அவருக்கு உதவி செய்ய விரும்பி, சர்மிலனை அழைத்து அந்த மகிழுந்தை அவசரமாக திருத்திக்கொடுக்கும் படி கூறுகிறார்.

சர்மிலனை பார்த்த அந்நபரோ ஒருகணம் திகைத்துப் போய் “என்னஉந்த சின்னப்பெடியன் உந்த காரை திருத்திடுவானோ?!” என ஆச்சரியக்குறியுடனும் கேள்விக்குறியுடனும் கேட்டார்.

சர்மிலனின் மாமா, “உவன் சின்னப் பெடியன் எண்டு நினையாதையுங்கோ; உவனுக்கு வாகனங்களை கலட்டி பூட்டிறது என்பது கைவந்த கலை. உவன் கண்ணை மூடிக்கொண்டு செய்வான்.” என்றார். யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் சொல்லாடலில்.
இங்கே இந்த சொல்லாடலைக் கவனியுங்கள், “கண்ணை மூடிக்கொண்டு செய்வான்” என்பது “கண்ணை மூடிக்கொண்டு செய்வது” என்பதல்ல பொருள். “மகிழுந்தை திருத்துவது என்பது சர்மிலனுக்கு மிகவும் எளிதான ஒரு விடயம்” என்பதே ஆகும்.

இவ்வாறு ஒருவருக்கு மிகவும் எளிதான அல்லது நன்கு பரிச்சயம் மிக்க ஒரு செயலை செய்வதனை “கண்ணை மூடிக்கொண்டு…” என சொல்லுதல் தமிழர் பேச்சு வழக்கில் அடிக்கடி பயன்படும் சொல்லாடல்களில் ஒன்று.

இங்கே இப்பாடம் உங்களுக்கு தரும் தகவல் என்னவென்றால் தமிழரின் பேச்சு வழக்கில் பயன்படும் பல சொல்லாடல்கள் அதே பொருற்பட ஆங்கிலத்திலும் பயன்படுகின்றன என்பது தான். அதில் ஒன்று தான் இச்சொல்லாடலும்.

எவ்வாறு என்று பார்ப்போமா?

சர்மிலனால் எப்படி மகிழுந்தை செய்ய முடியும்?

He can do it with his eyes closed.
கண்ணை மூடிக்கொண்டு அவனால் செய்ய முடியும்.
(அவனால் செய்ய முடியும் அவனுடைய கண்களை மூடிக்கொண்டு.)

I can do it with my eyes closed.
கண்ணை மூடிக்கொண்டு என்னால் செய்ய முடியும்
(என்னால் செய்ய முடியும் என் கண்களை மூடிக்கொண்டு.)

I can repair it with my eyes closed.
கண்ணை மூடிக்கொண்டு என்னால் பழுதுபார்க்க முடியும்
என்னால் பழுதுபார்க்க முடியும் என் கணகளை மூடிக்கொண்டு.)

I can read it with my eyes closed.
கண்ணை மூடிக்கொண்டு என்னால் வாசிக்க முடியும்.
(என்னால் வாசிக்க முடியும் என் கண்களை மூடிக்கொண்டு.)

I can operate it with my eyes closed.
கண்ணை மூடிக்கொண்டு என்னால் இயக்க முடியும்.
என்னால் இயக்க முடியும் என் கண்களை மூடிக்கொண்டு.)

இனி நீங்கள் என்னென்ன வேலைகளை “கண்ணை மூடிக்கொண்டு” செய்வீர்கள் என்பதை “with my eyes closed” எனும் சொற்றொடரை பயன்படுத்தி ஆங்கிலத்தில் பேசிப் பாருங்கள்.

கவனிக்கவும்:
இராம.கி ஐயா அடிக்கடி தனது ஆக்கங்களில், ஆங்கிலம் எனும் மொழி உலகில் தோற்றம் பெருவதற்கு முன்னரே, கீரேக்கர் மற்றும் உரோமர் பழங்காலந்தொட்டே தமிழர்களுடன் கொண்டிருந்த வணிக உறவுகள் பற்றியும், பல தமிழ் சொற்களும் சொல்லாடல்களும் ஐரோப்பிய மொழிகளில் கலந்திருப்பது பற்றியும் குறிப்பிடுவார். என்னாலும் இதை பல்வேறு கட்டங்களில் உணர முடிகிறது. காலம் எனக்கு கைகொடுத்தால் இந்த ஆய்வுகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் உண்டு. அல்லது ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளில் ஆளுமை பெறும் எம்மவர்கள் எவரேனும் இவ்வாய்வுகளை மேற்கொண்டு இவற்றின் தொடர்பை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது எனது ஆவல். அப்படி எவராவது செய்வாரெனில் எம்தாய் மொழி தமிழின் தொன்மை தொடர்பான பலவேறு விடயங்கள் வெளிவரும்.

இருப்பினும் இது ஒரு சிறிய விடயமல்ல. உலகின் பல்வேறு நாட்டு மொழியாய்வாளர்களையும் வரலாற்றாய்வாளர்களையும் இணைத்து அல்லது கலந்துரையாடகள் நிகழ்த்தி செய்ய வேண்டிய ஒரு ஆய்வு.

குறிப்பு:
இது ஒரு பேச்சு வழக்கு சொல்லாடல் மட்டுமே ஆகும். இப்பாடம் ஆங்கிலம் துணுக்குகள் பகுதியிலேயே வழங்கப்படுகிறது.

இது ஒரு ஒற்றை சொல்லாடல் என்றாலும், இச்சொல்லாடலின் பின்னால் உள்ள ஆங்கில சொல்லாடலுக்கும் எமது பேச்சு வழக்கின் சொல்லாடலுக்கும் இடையிலான தொடர்பே என்னை இப்பதிவை உங்களுக்கு வழங்க வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தியது. இன்னும் இதுபோன்ற பல்வேறு சொல்லாடல்களை எதிர்வரும் நாட்களில் எதிர்ப்பாருங்கள்.

இதுபோன்ற தகவல்கள் பயனுள்ளதா என்பதனை பின்னூட்டம் ஊடாக அறியத்தாருங்கள். மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் பகிர்ந்துக்கொள்ள தவறாதீர்கள்.

நன்றி!

மீண்டும் இன்னொரு பாடத்தில் சந்திப்போம்.

அன்புடன்
அருண் | HK Arun


Recommended For You

About the Author: Editor