ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தடுக்க கூகுள் சதி – ட்ரம்ப்!

ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக ட்ரம்ப் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் தனக்கு எதிராகவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்திலிருந்து கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட கெவின் கெர்னெகீ அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்போது அவர், ‘2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் ட்ரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதாலேயே நான் பணி நீக்கம் செய்யப்பட்டேன்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் ட்ரம்பின் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது’ குறிப்பிட்டிருந்தார்.

கெவின் கெர்னெகீயின் குறித்து ட்ரம்பின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் குறித்த நேர்காணலினை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘அனைத்தும் மிகவும் சட்டவிரோதமானது. நாங்கள் கூகுளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என குறிப்பிட்டார்.

‘கடந்த மார்ச் மாதம் வெள்ளை மாளிகைக்கு வந்த சுந்தர் பிச்சை, என்னை மிகவும் பிடிக்கும் என்று கூறியதோடு, எனது நிர்வாகத்தை புகழ்ந்து பேசினார்.

அமெரிக்க இராணுவத்துக்கே கடமைப்பட்டிருப்பதாகவும், சீன இராணுவத்துக்கு உதவுவதாக கூறுவது முற்றிலும் பொய் என்றும் அவர் விளக்கமளித்தார்.

அத்துடன் 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரிக்கு அவர்கள் உதவவில்லை என்றும், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை சட்டவிரோதமாக முறியடிக்க திட்டமிடவில்லை என்றும் என்னிடம் உறுதியளித்தார். கெவின் கெர்னெகீயை சந்திக்கும் வரையில் அதுதான் உண்மை என்று நினைத்திருந்தேன்.

அவர் கூறிதான் கடந்த தேர்தலில் ஹிலாரி குறித்த எதிர்மறையான தகவல்களை பின் தள்ளிவிட்டு, என்னை பற்றிய எதிர்மறையான தகவல்களை கூகுள் முன்னிலைப்படுத்தியது தெரியவந்தது.

இதேபோல் 2020 தேர்தலிலும் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டிருக்கிறது. இது சட்டப்படி குற்றம் என்பதால் கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor