காஷ்மீர் விவகாரம் – டெல்லிக்கான ரெயினை நிறுத்தியது பாகிஸ்தான்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடனான வர்த்தக உறவை துண்டித்துள்ள பாகிஸ்தான் தற்போது இந்தியாவிற்கான ரயில் சேவையை நிறுத்தியுள்ளது.

அந்தவகையில் பாகிஸ்தானில் இருந்து டெல்லி இடையே ஓடும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இன்று (வியாழக்கிழமை) முதல் நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாகா எல்லையில் இந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976ஆம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கும் இடையே ஆரம்பத்தில் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தது.

அதன்பின், காலிஸ்தான் அமைப்பினரின் அச்சுறுத்தலால் குறித்த ரயில் சேவை லாகூரில் இருந்து பஞ்சாப்பின் அட்டாரி பகுதிவரை மட்டுப்படுத்தப்பட்டது.

மேலும், 1994ஆம் ஆண்டு முதல் வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் இந்த ரயில் சேவையை தற்போது பாகிஸ்தான் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1972ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தில் காஷ்மீர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக அடையாலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த விடயத்தில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை இந்தியா மீறும் வகையில் செயற்பட்டுள்ளமையினால் பாகிஸ்தான் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்