இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் தொடுக்கலாம்.

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய 370ஆவது சட்டப்பிரிவை இந்தியா நீக்கியுள்ளதை அடுத்து, பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

குறித்த தாக்குதல் இந்திய விமான நிலையங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்காரணமாக நாடுமுழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், முக்கியமான சில விமான நிலையங்கள் பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான நிலையத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே பரிசோதனை செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விமான பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பின்பே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட நிலையில், குறித்த விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்ல பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுடனான அனைத்து வர்த்தக தொடர்புகளை துண்டிக்கப் போவதாகவும் இம்ரான்கான் கூறியுள்ளதுடன், பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை வெளியேற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் உளவுத்துறை மூத்த அதிகாரிகள், தீவிரவாதிகளை தொடர்பு கொண்டு, இந்தியாவுக்குள் தற்கொலை தாக்குதல்களை நடத்துமாறு கூறியதை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காஷ்மீர் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள சுமார் 300 தீவிரவாதிகளில் சிலரை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்யும் முயற்சிகளை பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்டுள்ளதாகவும் உளவுத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்