
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தம்மால் முன்வைக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரத்தின் மொழிப்பெயர்ப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பதிவிலேயே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரங்கள் அனைத்தும் சர்ச்சைக்குரியனவே என்றும் அமைச்சர் மனோ கணேசன் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தனது பத்திரங்களை அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளும் விதமாக சமர்ப்பிக்க, நல்லெண்ண அமைச்சரவை சகாக்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆதரவையும் கோர வேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாக தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் அல்லது, புனர்வாழ்வளித்து விடுவிப்பது தொடர்பாக அமைச்சரவை யோசனை ஒன்றை முன்வைக்கவிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையிலேயே, குறித்த அமைச்சரவை பத்திரத்தை 3 மொழிகளிலும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.