எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கொழும்பு குப்பைகள் புத்தளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது

கொழும்பில் தேங்கியுள்ள குப்பைகளை புத்தளம் அருவக்காட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய, இன்று (வியாழக்கிழமை) முதல் கொழும்பில் குப்பை சேகரிக்கும் பணிகள் சுமூகமடையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகளை கெரவலப்பிட்டிய குப்பைமேட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், குப்பைகளை கொட்டுவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகள், வாகனங்களிலேயே காணப்படுவதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்திருந்தார்.

மேலும் அருவக்காடு கழிவகற்றல் தொகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு, வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு மாதாந்தம் 2.5 மில்லியன் ரூபாய் கொடுப்பனவு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக தேவையான ஒப்பந்தம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கையெழுத்திடப்பட்டு, அருவக்காடு குப்பைகள் மேலாண்மை செய்யும் இடத்திற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த விடயங்கள் தொடர்பாக நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலில் கொழும்பு மாநாகர சபைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள குப்பைகளை அருவக்காட்டில் கொட்டுவதற்கான இணக்கப்பாடு எட்டப்படலாம் என கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே, மீண்டும் இன்று முதல் குப்பை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என கொழும்பு மாநகரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், புத்தளத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு அந்த பகுதி மக்கள் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்தோடு, குப்பை கொட்டுவதற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்