
நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகலிலும் இரவிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தோடு, நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலையும் தொடர்ந்தும் அதிகரிக்குமென அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.
மேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை காற்று வீசுமென அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மேல், மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
கடும் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.