
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “இந்திய வரலாற்றில் ஓர் அத்தியாயம் முடிந்துவிட்டது.
ஏழை மக்களின் நலனுக்காகவும், பொது வாழ்வுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தலைவரின் மறைவால் நாடே துயரத்தில் உள்ளது. தனது அன்பினால் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்தவர்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கோவா எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத், கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் கடந்த 1953-ஆம் ஆண்டு பிறந்த சுஷ்மா ஸ்வராஜ், 7 முறை நாடாளுமன்ற உருப்பினராகவும் 3 முறை எம்.எல்.ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
25-ஆவது வயதில் ஹரியாணாவில் அமைச்சர் பொறுப்பேற்று, அந்த மாநிலத்தில் இளம் வயதில் அமைச்சர் பொறுப்பு வகித்த முதல் தலைவராக விளங்கினார். டில்லி முதல்வராக கடந்த 1998-ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் அதே ஆண்டில் டிசம்பர் வரை பதவி வகித்தார்.
வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசில் செய்தி – ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1999-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கர்நாடக மாநிலம், பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவியிருந்தார்.