சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பு தடையாக உள்ளது. – மைத்திரி

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடைகள் ஏற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சிறந்த அரசியல் கலாசாரமொன்றிற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கையளிக்கும் தேசிய நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி  இதனை தெரிவித்தார்.

நாட்டில் சிறந்ததோர் அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகள் உள்ளடங்கிய முன்மொழிவொன்றினை அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு முன்வைக்கும் நோக்குடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முன்மொழிவுகள் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுகள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, சங்கைக்குரிய மகாசங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் உடன்பாட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகள் குறித்து தானும் முழுமையான உடன்பாட்டினை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு இணக்கம் தெரிவித்தால் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குள்ள சலுகைகளுக்கு மேலதிகமாக மேலும் சலுகைகளை பெற்றுக்கொள்ள அங்கீகாரமளிப்பதற்கு தான் உடன்படாதிருப்பது மக்களின் பணம் வகைதொகையற்ற முறையில் செலவிடப்படுவதை தான் அங்கீகரிக்காத காரணத்தினாலேயே என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினரும் ஏனைய மதத் தலைவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்