பேரன்களின் சண்டையை தடுக்க சென்றவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம்.

சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார். கத்தியால் குத்தியவர் 16 வயது மாணவன் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வெற்றிலைக்கேணி முள்ளியான் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது.

சம்பவத்தில் சுப்ரமணியம் கங்கேஸ்வரி (வயது -72) என்பவரே கொல்லப்பட்டார்.

வீட்டில் மூத்த சகோதரரும் இளைய சகோதரனுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது. அதனைத் தடுப்பதற்கு அவர்களது அம்மம்மா முயற்சித்துள்ளார். அப்போது மூத்த சகோதரனுக்கு கத்தியால் குத்துவதற்கு இளைய சகோதரன் முயன்ற போது கத்தி அம்மம்மாவின் நெஞ்சில் பாய்ந்தது.

அம்மம்மாவுக்கு கத்தியால் குத்தியதையடுத்து பதற்றமடைந்த சகோதரர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அவரின் உயிர் வழியில் பிரிந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 16 வயதுடைய சுபாஷ் சசிகரன் என்ற மாணவனைக் கைது செய்தனர். மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்