சின்னமைக்கு ஆங்கில மருத்துவம் செய்வது சரியா

சின்னமை நோய்க்கு ஆங்கில மருத்துவம் செய்வது சரியா?
எஸ். பரணி வவுனியா

பதில்:- சின்னம்மை நோயை சிலர் கொப்பளிப்பான் என்றும் சொல்வர். வைரஸ் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய். கொப்பளங்கள் பொதுவாக வயிறு முதுகு தொடை ஆகியவற்றில் ஆரம்பித்து கை முகம் என உடல் முழுவதும் பரவும். 200 முதல் 500 கொப்ளங்கள் வரை போடக் கூடும்.

பொதுவாக 6-7 நாட்களில் தானாகவே அடங்கிவிடும். ஆரம்ப கட்டத்தில் தனிமைப்படுத்தாவிட்டால் குடும்பம் முழுவதற்கும் தொற்றக் கூடிய வாய்ப்பு உள்ளது.

சின்னம்மை என்பது அம்மன் நோய் என்பது எம்மவர்கள் நம்பிக்கை. அதனால் மருந்து செய்யக் கூடாது என்ற எண்ணம் ஆழமாக வேருன்றிவிட்டது. ஆனால் அது என்ன நோய் எந்தக் கிருமியால் வருகிறது. அதைக் குணப்படுத்துவதற்கான மருந்து என்ன போன்ற அனைத்து விடயங்களும் விஞ்ஞான பூர்வமாக தெரிந்த இன்றைய காலகட்டத்தில் மருந்து செய்யக் கூடாது என்று நினைப்பது தவறு என்றே சொல்வேன்.

இருந்தபோதும் இது தானாகவே குணமாகிவிடும் நோய் என்பதால் பொதுவாக மருந்துகள் கட்டாயம் தேவை என்றில்லை. ஆயினும் இது ஒரு அவசர யுகம். பள்ளிக்கூடம் படிப்பு வேலை வேறு நிகழ்வுகள் என பல வேலைகள் நிறைந்து கிடப்பதால் நோயை விரைவில் குணமாக்கி வழமைக்கு திரும்ப வேண்டும் என்பதே பலரது அவாவாகும். அதனால் மருந்துகளை நாடுகிறார்கள்.

கொப்பளிப்பான் நோயைத் தணிப்பதற்கான அன்ரி வைரஸ் இப்பொழுது கிடைக்கிறது. பாதுகாப்பானது. பயப்பட வேண்டியதில்லை. தேவையெனில் உபயோகிக்கலாம்.

ஆனால் அதை நோய் தொடங்கிய அதாவது முதல் கொப்பளம் தோன்றிய முதல் இரு நாட்களுக்குள் உபயோகிக்க ஆரம்பித்தால்தான் பலன் கிடைக்கும். எனவே சிகிச்சை அவசியம் என்று தோன்றினால் நோய் தொடங்கிய உடனேயே மருத்துவரை நாடுங்கள்.

பொதுவாக மருந்து தேவையில்வை என்று சொன்னாலும், அந்த நோயினால் பாதிப்பு அதிகம் ஏற்படக் கூடும் என்ற நிலையில் உள்ள சில நோயாளிகள் கட்டாயம் மருந்து சாப்பிட வேண்டும். வாயினால் உட்கொள்ளும் மருந்துகள் மட்டுமல்லாது ஊசியானல் செலுத்தும் மருந்துகளும் சிலருக்கு தேவைப்படலாம்.

கர்ப்பணிப் பெண்கள், எச்.ஐ.வி தொற்று உள்ளோர், சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை செய்தோர், ஸ்டிரொயிட் மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோர், சிலவகை சரும நோயாளர்கள் போன்றவர்கள் கட்டாயம் மருந்து சாப்பிட்டே ஆக வேண்டும்.

இல்லையேல் உயிராபத்து ஏற்படும் அபாயம் உண்டு.

தானாகவே குணமாகும் என்று சொன்ன போதும் சிலருக்கு கொப்பளங்களில் பக்றீரியா கிருமித் தொற்று ஏற்பட்டு அவை சீழ் பிடிப்பதைக் காண்கிறோம். அதனால் காய்ச்சல் தணியாமல் அதிகரிக்கும். வேதனையும் ஏற்படும்.

இதற்குக் காரணமும் எம் மக்களிடையே காணப்படும் தவறான நம்பிக்கைகளேயாம். இந்த நோய் வந்தால் அவர்கள்குளிப்பதே இல்லை. 7ம் நாள் 9ம் நாள் என நாள் வைத்து தோய்வார்கள். அதற்கிடையில் சருமம் அழுக்காகி கிருமிகள் சேர்ந்து கொப்பளங்கள் சீழ் பிடித்துவிடுகின்றன.

எனவே ஆதாரமில்லாத பழைய நம்பிக்கைகளை கைவிட்டு தினமும் குளித்து தோய்ந்து உடலைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இவ்வாறு சீழ்பிடித்தால் அதற்கான அன்ரிபயோடிக் மருந்துகள் சாப்பிட வேண்டும்.

கொப்பளிப்பான் வராமல் தடுக்கவும் முடியும். ஆம். கொப்பளிப்பானுக்கு எதிரான தடுப்பூசி கிடைக்கிறது. 1வயது முதல் 13 வயதுவரையான குழந்தைகளுக்கு ஒரு ஊசி போதுமானது. 13 வயதிற்கு
மேற்பட்டவர்களுக்கு இரண்டு ஊசிகள் 6 வார இடைவெளியில் போடப்படும்.

இது நோய் வந்தவுடன் போடப்படுவதற்கானது அல்ல. வராமல் தடுப்பதற்கானது.

இந்த ஊசியானது அரசாங்கத்தின் வழமையான தடுப்பூசி திட்டத்தில் இல்லை. விலைக்கு வாங்கிப் போடப்பட வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்


Recommended For You

About the Author: Editor