டமகம விபத்தை தொடர்ந்து மக்கள் அவசர கோரிக்கை!

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹற்றன் செல்லும் பாதை அகலப்படுத்தப் படாததாலேயே அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதாகவும் வீதியை அகலித்து புனரமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பாதையூடாக ஹற்றன் நோக்கிப் பயணித்த பேருந்து போடைஸ் என்.சி.தோட்டப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 49 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இவ்வாறான கோர விபத்துக்களை்த தடுக்க குறித்த வீதியை அகலித்து புனரமைக்க வேண்டியது உடனடித் தேவையென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் தெரிவிக்கையில், “குறித்த வீதியை அகலப்படுத்துமாறு பல தடவைகள் கோரியிருந்தோம். இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எதிர்த் திசையில் வரும் வாகனத்துக்கு இடம் கொடுப்பதற்குக்கூட பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இதற்கு முன்னரும் விபத்துகள் இந்த வீதியில் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பாடசாலை மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தொழிலுக்குச் செல்பவர்களும் இருக்கின்றனர். விபத்துகளால் சிலர் உடல் அவயங்களையும் இழந்துள்ளனர்.

எனவே, இனியும் விபத்துகள் இடம்பெறாதவாறு வீதியை அகலப்படுத்திக் கொடுப்பதற்கும், புனரமைப்புச் செய்வதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட்ட நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தைவேலு, “ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இவ்வீதியில் பாரிய கல்லொன்று விழுந்திருந்தது.

அதனை அகற்றுவதற்கு மாகாண மற்றும் மத்திய வீதி அபிவிருத்தி அதிகார சபைகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நோர்வூட் பிரதேச சபை ஊடாகவே நிதி ஒதுக்கி அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுத்தோம்.

அதுமட்டுமல்லாது, மாகாண அதிகாரசபை ஊடாக இவ்வீதியை புனரமைக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இது சம்பந்தமாக சுட்டிக்காட்டியிருந்தேன்.

இந்நிலையில், விபத்து இடம்பெற்ற பின்னர் கதைப்பதில் பயனில்லை. எனவே, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக புனரமைப்புப் பணி இடம்பெறவேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தேன்.

இவ்வாறா நிலையில், இன்று இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்து கண்டிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

எனவே, உடனடியாக வீதியை அகலப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் பிரதேச சபை ஊடாக வீதியை மூட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor