கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

கன்னியாகுமரியில் 50 அடி தூரத்துக்கு  திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள்  அச்சமடைந்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில், கடல் 2ஆவது நாளாக மீண்டும் உள்வாங்க தொடங்கி,நேரம் செல்ல செல்ல கடல் நீர் சுமார் 50 அடி தூரத்துக்கு உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடலுக்கு அடியில் இருந்த ராட்சத பாறைகள், மணல் திட்டுகள், மணல் பரப்புகள் வெளியே தெரிய தொடங்கின. அத்துடன் கடலுக்குள் இருந்த விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைகள் திடல் போல் காட்சியளித்தது. இதை பார்த்த மீனவர்கள் ஒருவித அச்சத்துடனும் பீதியுடனும் காணப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, விடிய விடிய அதே நிலைமை நீடித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் கன்னியாகுமரி கடல் இதுபோல் உள்வாங்கியது. தற்போதும் அதேபோல் கடல் உள்வாங்கியதால் கடற்கரையோர மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்துள்ளனர்.

பொதுவாக கன்னியாகுமரி கடல் அடிக்கடி பகல் நேரங்களில் மட்டுமே அவ்வப்போது சில அடிதூரம் மட்டுமே உள்வாங்கி வந்தது. தற்போது கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கடல் உள்வாங்கும் சம்பவம் நடைபெறுவதுஇ மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளதாவது, “கன்னியாகுமரி பகுதியில் பகல் நேரத்தில் கடல் உள்வாங்குவதை பார்த்து இருக்கிறோம். இரவு நேரங்களில் கடல் உள்வாங்கியதை இப்போதுதான் நாங்கள் பார்க்கிறோம். தொடர்ந்து 2 நாட்களாக இரவு நேரங்களில் கடல் உள்வாங்கி இருப்பது எங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்