பசுவதைக்கு எதிராக குரல் கொடுத்த பூசகர் அடித்துக்கொலை.

யாழ்ப்பாணம் தீவக பகுதிகளில் இடம்பெறும் பசு வதைக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததுடன் அதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்த பூசகர் இனம்தெரியாத கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
புங்குடுதீவில் உள்ள அவரது வீட்டினுள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு புகுந்த கும்பல் , வீட்டினுள் அவருடன் இருந்த  உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு, பூசகரை அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளது.
புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், பசுவதைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், பொலிஸாருக்கும் தகவலை வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை , கொலையுடன் பூசகருடன் வீட்டிலிருந்த  உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்