நிறுத்தப்பட்டது ‘கல்பனா சாவ்லா’ விண்கலத்தின் பயணம்!

கல்பனா சாவ்லா’ விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் நடவடிக்கை இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது.

குறித்த விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கு இரண்டு நிமிடங்கள், 40 வினாடிகள் இருக்கும்போது தரைக்கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பயணம் இரத்துச் செய்யப்பட்டது.

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ விண்கலம் அனுப்பப்படவுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான மறைந்த கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்ட இந்த விண்கலத்தை நேற்று (வியாழக்கிழமை) இரவு விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வெர்ஜினியாவில் இருந்து விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான நோர்த்ரூப் கிரம்மானின் அன்டரேஸ் ரொக்கெட் மூலம் விண்கலம் அனுப்பப்படவிருந்தது.

எனினும், இறுதி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு கண்டறியப்பட்டதுடன் கோளாறை சரிசெய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor