எந்த மக்கள் குழுவையும் பாதுகாப்பு தரப்பு கண்காணிக்கவில்லையாம்!

இலங்கையில் பாதுகாப்பு படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் நாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையில் இலங்கை தொடர்பாக அச்சுறுத்தும் விஜயங்கள் கண்காணிப்பு துன்புறுத்தல் குறித்த முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சார்பாக விளக்கமளிக்கும்போதே, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி டயானி மென்டிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் பொதுச் செயலாளரின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பகிரங்கமாக நிராகரித்துள்ளது என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரம், சிவில் சமூகத்திற்கான தளம் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என தெரிவித்துள்ள டயானி மென்டிஸ், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூகத்தினருக்கு எதிரான சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு நலன் தொடர்பாக வழமையான பாதுகாப்பு வலையமைப்புகளை இயக்குவதற்கு அப்பால் பாதுகாப்பு தரப்பினரும் புலனாய்வு பிரிவினரும் நாட்டின் எந்த குழுவினரையும் விசேடமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும் டயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் தீவிரவாத சக்திகள் நவீன வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்ற இந்த தருணத்தில், தனது தேசிய பாதுகாப்பு தொடர்பாக பலவீனமாக காணப்படும் எந்த நாடும் கவலைதரும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் இந்த யதார்த்தத்தினை புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor