மீண்டும் கணக்காளர் நாயகத்தின் கீழ் ஜனாதிபதியின் செயலகம், பிரதமர் அலுவலகம்!

கணக்காளர் நாயகத்தின் கீழ் ஜனாதிபதியின் செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை கொண்டுவருவதற்கு 20 வது திருத்தத்தில் அரசாங்கம் ஒரு திருத்தத்தை கொண்டுவரும் என அறியமுடிகின்றது.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபில் மேலும் சில திருத்தங்களை அரசாங்கம் முன்வைக்கும் என சட்டமா அதிபர் ஏற்கனவே நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அதன்படி நாடாளுமன்றத்தின் இடம்பெறும் குழுநிலை விவாதத்தின்போது 20 ஆவது திருத்தத்தில் சுமார் 10 ற்கும் மேற்பட்ட மாற்றங்களை அரசாங்கம் கொண்டுவரும் என்றும் அதில் பெரும்பாலானவை பொறிமுறை மாற்றங்களாக இருக்கும் என்றும் அறியமுடிகின்றது.

குறிப்பாக முன்னர் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை கணக்காளர் நாயகத்தின் கீழ் இருந்து விலக்கியதற்காக அரசாங்கத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னரே நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் என்ற ஒரு விதியும் அதில் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் வர்த்தமானி செய்யப்பட்ட அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தில் ஒரு வருடத்தில் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்தமைக்கு அமைவாக அரசாங்கம் குழுநிலை விவாதத்தின்போது 20 ஆவத்திருத்த வரைவுக்கான இவ்வாறான சில திருத்தங்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்