ஐ.எஸ். தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை – சாகல

அடிப்படைவாத சம்பவங்கள் தொடர்பில் 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளன போதும் ஐ.எஸ். தீவிரவாதம் எமது நாட்டில் செயற்படுவதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சாட்சியமளிக்கு போதே மேற்கொண்டவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது காலத்தில், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்திருந்தேன்.

அடிப்படைவாத சம்பவங்கள் தொடர்பில் 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், ஐ.எஸ். தீவிரவாதம் எமது நாட்டில் செயற்படுவதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

முஸ்லிம் – சிங்கள அடிப்படைவாதங்கள் தொடர்பிலான சம்பவங்களே எமக்குக் கிடைத்திருந்தன. வனாத்துவில்லு பகுதியில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை, வவுனதீவு பொலிஸார் கொலை மற்றும் அமைச்சர் கபீர் ஹாசீமின் செயலாளர் கொல்லப்பட்டமை குறித்து, நாம் அமைச்சரவையில் பெரிதாக ஆராயவில்லை.

எனினும், இந்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள், நான் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டன என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்.

2017 களில் நடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டங்களின்போது, சஹ்ரான் தொடர்பில் பேசப்பட்டதாகவே கருதுகிறேன். எனினும், இந்த விடயத்தை அவ்வளவு பாரதூரமான ஒன்றாக நாம் கருதவில்லை. அவர் அன்று தீவிரவாதியாக அடையாளம் காணப்படவில்லை. மாறாக, மத அடிப்படைவாத சிந்தனைக் கொண்ட ஒருவராகவே கருதப்பட்டார்.

இந்த விடயத்தில் எங்கு பிழை இடம்பெற்றது என்பதைத்தான் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இந்த விடயத்தில், அனைத்துத் தரப்பினரையும் குறைக் கூறிக்கொண்டிருந்தால், இதற்கான முடிவினைக் காணமுடியாது.

இதற்கு முடிவினை காணவேண்டுமெனில், இனிமேல் அவ்வாறானதொரு தவறு இடம்பெறாத வகையில் நாம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனறார்.


Recommended For You

About the Author: ஈழவன்