உலகத் திரைப்பட விழாவில் ‘ஒத்த செருப்பு’!

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு திரைப்படம் சிங்கப்பூர் சர்வதேச திரைப்படவிழாவுக்கு தேர்வாகியுள்ளது.

திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் படங்கள் வணிகரீதியாக வெற்றிபெறாது என்ற கருத்து சமீபகாலமாக மாறத் தொடங்கியுள்ளது.

சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துவருகிறது.

அதே போல் இங்கு வெற்றியடையும் படங்கள் அதன்பின் திரைப்பட விழாக்களுக்குச் சென்று கவனம் பெறுகின்றன.

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதும், விருதுபெறுவதும் படங்களுக்கான புரொமோஷனாக தற்போது பார்க்கப்படுகிறது.

படத்தின் தயாரிப்புக்கு நிகராக புரொமோஷனுக்கு செலவு செய்தால் மட்டுமே ரசிகர்களைச் சென்றடைய முடியும் என்ற நிலையில் மேற்சொன்ன முறை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் எளிதாக அமைகிறது.

அறிமுக இயக்குநர்கள் மட்டுமல்லாமல் பார்த்திபன் போன்ற பிரபலமான இயக்குநர்களும் திரைப்பட விழாக்களுக்கு தங்கள் படங்களை அனுப்புகின்றனர்.

அந்த வகையில் ஒத்த செருப்பு படம் சிங்கப்பூர் உலகத் திரைப்பட விழாவிற்கு தேர்வானதை பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அந்த போஸ்டரில் முதன்முறையாக ஒரே ஒரு நபர் மட்டும் நடித்து அவரே இயக்கிய படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகராக பிரபலமான பின்னரும் தொடர்ந்து படங்களை இயக்குவதோடு சோதனை முயற்சிகளையும் செய்துபார்க்கும் பார்த்திபன் இந்தப் படத்திலும் அதை தொடர்ந்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor