தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவை யாழ். போதனா வைத்தியசாலையுடன் இணைக்க எதிர்ப்பு

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கு வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்று மாலை தெல்லிப்பழை வைத்தியசாலை மண்டபத்தில் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் கூடி ஆராய்ந்தனர்.

பொது வைத்தியசாலை அல்லது சிறப்பு வைத்தியசாலையாக தெல்லிப்பழை வைத்தியசாலையைத் தரமுயர்த்துவதற்குக் கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க 7 பேர் கொண்ட குழு ஒன்றும் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

“கடந்த காலத்தில் நடைபவனி மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தில் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட ஒரே ஒரு புற்று நோய் பிரிவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் மத்திய அரசின் கீழ் செல்லும்போது இங்கே பல நிர்வாக சிக்கல்கள் தோன்றுவதற்குரிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் வரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையுடன் புற்றுநோய் சிகிச்சை பிரிவு தற்போது இயங்கி வருகிறது. அதற்கான செலவீனங்கள் அதிகம் என்பதால் மத்திய அரசின் கீழ் வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்துடன் புற்றுநோய் சிகிச்சை பிரிவை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பல வசதிகளைக் கொண்ட மாபெரும் வைத்தியசாலையாக வளர்ந்து வரும் புற்றுநோய் வைத்தியசாலையை தற்போதைய நிலையில் நோயாளர்கள் வழமை போன்று தமது சிகிச்சையினை பெற்றுக் கொள்கின்றனர். இதனை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும்போது பல இடர்பாடுகளை நிர்வாக சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம்” என்று தெல்லிப்பழை வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் பா.சுரேஷ் குமார் தெரிவித்தார்


Recommended For You

About the Author: ஈழவன்