400 ற்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்கேற்புடன் தற்காப்பு செயன்முறை நிகழ்வு

ஜே.கே.எஸ் (JKS) தற்காப்பு கலையகத்தின் நிறுவுனர் பொறியியலாளர் ரொசிகரிந் தலைமையில் வருடாந்த செயன்முறை நிகழ்வு மானிப்பாய் நகரசபை மண்டபத்தில் கடந்த 27 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்த்தப்பட்டது.

பிற்பகல் 3.30 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் ஜே.கே.எஸ் தற்காப்பு கலையகத்தின் இலங்கை முழுவதுமான 10 கிளைகளில் இருந்து 400 ற்கும் மேற்பட்ட மாணவர்களும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களும் கலந்துகொண்டர்.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மதிவாணன் அவர்களும் மனைவி திருமதி மதிவாணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக திரு. துசியந்தன் (நிறுவுனர் வீபோட் சர்வதேச பாடசாலை), திரு. திருமதி சுஜீவன் (எவர்சைன் கிட்ஸ் வேள்ட் யாழ்ப்பாணம்), திரு கயானன் (ரீ.ஐ.ரீ கல்வியகம் அளவெட்டி) திரு இளங்கோபன் (ஏ.ஸ்.ன் கல்வியகம் உரும்பிராய்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இரவு 7 மணி வரை நடைபெற்ற இந் நிகழ்வில் ஆரம்பத்தில் ஜே.கே.எஸ் தற்காப்பு கலையகத்தின் சிறுவர்களினால் தற்காப்பு செயன்முறைகளும் விளக்கங்களும் காண்பிக்கப்பட்டதுடன் சிறு வயதில் அவர்களின் உற்சாகமான செயற்பாடு பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

பயிற்சியின் சிறப்பான பெறுபேற்றை சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் வெளிப்படுத்தி இருந்தார்கள். மேலும் மாணவர்களினால் தற்காப்புக்கலை உத்திகளும் செயன்முறைகளும் ஓடு உடைத்தல், நெருப்பு வைளையத்தினூடாக பாய்தல் போன்ற வியத்தகு துல்லியமான நிகழ்வுகளும் காண்பிக்கப்பட்டது.

ஜே.கே.எஸ் தற்காப்பு கலையகத்தின் இச்செயற்பாடு எதிர்காலத்தில் தற்காப்புக்கலையில் பெரு வளர்ச்சியை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்