கோமாளி டிரெய்லர்: ரஜினி ரியாக்‌ஷன்!

ரஜினிகாந்தின் அரசியல் வருகையைக் கலாய்த்த கோமாளி படத்தின் டிரெய்லரைப் பார்த்த ரஜினி, படக்குழுவைப் பாராட்டியுள்ளார்.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோமாளி.

பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் கோமாளி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

இந்தப் பட டிரெய்லரில், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை பகடி செய்யும் காட்சிகள் இடம்பெற்றதையடுத்து ரஜினி ரசிகர்கள் வருத்தமடைந்து, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவரும் ரஜினியின் நண்பருமான கமல்ஹாசன் கோமாளி டிரெய்லரைப் பார்த்துள்ளார்.

உடனடியாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசனை தொடர்புகொண்டு, ‘இதை என்னால் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் படத்தின் டிரெய்லரைப் பார்த்துள்ளாராம். பார்த்ததோடு மட்டுமல்லாமல், படக்குழுவைப் பாராட்டியுள்ளார் ரஜினி.

டிரெய்லரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கடைசி காட்சி தன்னை தாக்கியதாக அவர் கருதவில்லை என்கிறது படக்குழு.

மேலும், சினிமா வேறு, அரசியல் வேறு என்று கூறிய அவர், அக்காட்சியை அகற்ற வேண்டாம் என்று கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கோமாளி படத்தை விரைவில் காணவுள்ளதாகக் கூறி படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தின் பெருந்தன்மையால் நெகிழ்ந்து போன படக்குழு, அக்காட்சியை எடுப்பதில் இன்னும் உறுதியாகவுள்ளதாம்.

அதற்குப் பதிலாக மேலும் எவ்வாறு அதை மாற்றி சுவாரஸ்யப்படுத்தலாம் எனவும் யோசித்து வருகிறதாம் கோமாளி டீம்.


Recommended For You

About the Author: Editor