அம்பாறை மக்கள் கடையடைப்பை புறக்கணித்தனர்!

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள், வடக்கு- கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு விடுத்த கோரிக்கையினை அம்பாறை மாவட்ட மக்கள்  நிராகரித்து, வழமையான செயற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இம்மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களில்  மக்களின் நடமாட்டம்  வழமை போன்று  காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை, இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வியாபார நிலையங்கள், சுப்பர்மார்க்கெட்டுகள், பாடசாலைகள், பாமசிகள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கப்பட்டடு வியாபாரம் இடம்பெற்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor