20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாளை வரையில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும்

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) வரை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20ஆவது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் நாடாளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சார்பாக பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, முன்னாள் ஆளுநர் கீர்த்தி தொன்னகோன் உள்ளிட்ட பலர் விசேட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அதனடிப்படையில், இதுவரை 18 மனுக்கள் 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்