திலீபனுக்காக நீலிக்கண்ணீர் வடிகின்றார்கள்!

சுயலாப அரசியலுக்காகவே தியாக தீபம் திலீபன் நினைவுகூரப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குற்றம் சாட்டியுள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “திலீபனை நினைவுகூருவது தொடர்பாக தற்போது பேசி வருகின்ற அரசியல் தலைவர்கள் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக பேசுகின்றார்களே தவிர, எவரும் உளப்பூர்வமாக பேசவில்லை.

குறித்த அரசியல் தலைவர்களை இதுதொடர்பான பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கின்றேன்.

குறிப்பாக ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் போன்ற அமைப்புக்களை புலிகளின் தலைமை அழித்தபோது யாழ்ப்பாணத்தில் அதனை நேரடியாக திலீபன் வழிநடத்தியிருந்தார்.

அதேபோன்று, தமிழரசுக் கட்சித் தலைவர்களும் புலிகளின் தலைமையினால் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அதுமாத்திரமல்ல, தற்போது குறித்த அமைப்புக்களின் தலைவர்களாக திலீபனை நினைவுகூர வேண்டும் என்று கையொப்பம் இட்டவர்களும் புலித் தலைவர்களின் கொலைப் பட்டியலில் இருந்தவர்கள்தான். இவ்வாறானவர்களினால் உளப்பூர்வமாக திலீபனை நினைவு கூரமுடியாது.

எனினும் காத்திரமான அரசியல் வேலைத் திட்டம் ஏதுமின்றி மக்கள் ஆதரவை இழந்துள்ள நிலையில், புலிகளின் ஆதரவாளர்களையாவது வளைத்துப் பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் திலீபன் தொடர்பாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்