காஷ்மீர் பிரச்சனை – அரசியல் தலைவர்கள் கைது

காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சரான மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஜம்மு – காஷ்மீர் மக்கள் மாநாடு கட்சி தலைவர்கள் சஜ்ஜத் லோன், இம்ரான் அன்சாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், குறித்த கைதுக்கான காரணம் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது அரசியல் சட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு முன்பே காஷ்மீரில் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பரூக் அப்துல்லா வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினர்.

குறித்த ஆலோசனையில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்தால் போராட்டம் நடத்துவதற்கு தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அன்று இரவே முன்னாள் முதலமைச்சர்களான மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்