கோப்ரல் சுனிலுக்கு எதிரான வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்!

இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 8 பேரை படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன இன்று (24) விலகியுள்ளார்.

மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக சுனில் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்குரிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தில் தாம் அங்கம் வகிப்பதால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக நீதியரசர் பிரியந்த ஜயவர்தன பகிரங்க நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் கடந்த மார்ச் மாதம் சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை எதிர்வரும் பெவ்ரவரி மாதம் 08ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, பி.பத்மன் சூரசேன மற்றும் யசந்த கோத்தாகொட ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor