சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்றது

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி நாளை சனிக்கிழமை யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் போராட்டமும் நடத்தப்படவுள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று கூட்டாக அறிவித்துள்ளன.

இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே இரா.சம்பந்தன் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இறந்தவர்களை நினைவுகூர்வது ஜனநாயக உரிமை. அதை எவரும் தடுக்கவே முடியாது. ஒரு மனிதர் எந்த வழியில் உயிரிழந்தாலும் அவரை அவரது சமூகம் நினைவுகூர உரித்துண்டு. இதைத் தடுத்து நிறுத்துவது சர்வாதிகாரச் செயல்.

தற்போதைய ஆட்சியில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்றது. தமிழ்பேசும் சமூகத்தினரை இலக்குவைத்து அராஜகங்கள் அரங்கேறுகின்றன. அதில் ஒன்றுதான் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு. இதை ஒருபோதும் ஏற்கவே முடியாது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழினத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடி உயிர்நீத்தவரே தியாக தீபம் திலீபன். 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டி இறுதியில் உயிர்நீத்த அவரின் தியாகத்தை எவரும் கொச்சைப்படுத்த முடியாது.

அவரை நினைவுகூர தமிழ்பேசும் சமூகத்துக்கு முழுமையான உரிமையுண்டு. அந்த உரிமை கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆட்சியில் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் (26), எதிர்வரும் திங்கட்கிழமையும் (28) நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்”எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்