கந்தளாய் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஒன்பது பேர் கைது!

கந்தளாய் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஒன்பது சந்தேகநபர்களை நேற்றிரவு கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 95ஆம் கட்டை மழையடிவார காட்டுப்பகுதியில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த ஒன்பது பேரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களில் இருவர் முள்ளிப்பொத்தானை 99ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர்களென்றும், ஏனைய ஏழு பேரும் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவருகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் திருகோணமலை நகரசபையில் தீ அணைப்பு படை பிரிவு மற்றும் இளைஞர் படையணியில் கடமையாற்றி வருபவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய வான் ஒன்றும், மோட்டார்சைக்கிளும் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Recommended For You

About the Author: ஈழவன்