யாழ்.குலதெய்வ ஆலயங்களில் மிருகபலி

யாழ்ப்பாணத்தில் சிலகுலதெய்வ ஆலயங்களில் மிருகபல(கடா வெட்டுதல், கோழி வெட்டுதல் முதலியன) உண்டு.

இதனைத் தடைசெய்யவேண்டுமென சிலர் முன்னின்று இயங்குகின்றனர்!

யாழ்ப்பாணச்சூழலைத்தாண்டிய தமிழரின் இருப்பைப்பற்றி அக்கறையின்றி எழுந்த கோட்பாடாகவே மிருகபலித்தடையை நாம் கருதினோம்.

இலங்கையின் வடமேற்குப்பிராந்தியத் தமிழர் சிங்களக் கிருஷ்தவ சமூகமாய்ப் பெருமளவில் மாறி, இன்று வடமேற்குப்பிரதேசம் சிங்கள மக்களின் நிலமாயிற்று. யாழ்ப்பாணத்தைத்தாண்டிய தமிழர் தேசியத்தைச் சிந்திக்காத நம்மவர் தவறுகளினாலேயே இவ் இனமாற்றமுண்டாயிற்று.

இன்று இப்பிரதேசங்களில் எஞ்சியுள்ள தமிழரிடம் குலதெய்வ வழிபாடுகளே, அவர்களைத் தமிழோடு பிணைத்துள்ளது. அது மட்டுமல்ல; வடக்கு முதல் தெற்குவரை பரந்துள்ள தமிழர்குடிகளில் குலதெய்வ வழிபாடுகளில் மிருகபலி பரவலாயுண்டு.

சைவ வித்தகர்கள் சென்று பிரசங்கங்கள் செய்யாத, தமிழ்மொழிப் பாடசாலைகளேயில்லாத தமிழர் இடங்கள் பலவுண்டு. கல்வித் திணைக்களத் திட்டமிடல் பணிப்பாளராக இருக்கும் திரு. க. பத்மானந்தன் அவர்களுடன் கதைக்கும் போது, கந்தல என்னும் கிராமம் ஒன்றில் வெறும் 50 தமிழ்க்குடும்பங்களேயிருப்பதாகவும் அவர்கள் சிங்களமொழியிலேயே கற்பதாகவும் அவர்கள் தமிழராய் இன்றும் இருப்பதற்கு அங்குள்ள கிராமக்குலதெய்வ வழிபாடேகாரணமென்றும் கூறியிருந்தார். இப்படி இலங்கையின் பலபாகங்களில் தமிழரைத் தமிழராக வாழவைத்துக்கொண்டிருப்பது இக்குலதெய்வ வழிபாடுகளும் அவர்களின் சமய நம்பிக்கைகளுமேயாகும்.
இவற்றை நாம் பிடுங்கியெடுத்துவிட்டால், மதமாற்றமும் இனமாற்றமும் சர்வசாதரணமாகிவிடும்.

ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டபின்னரும் நம்சமயம் காக்கப்பட்டதென்றால், அது குலதெய்வங்களின் காரணமாய்த்தான்!

“ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரத்தார் அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே” என்ற அப்பர் தேவாரம் தூலமாயும் சூட்சுமமாயும் பெரும்பொருள் உடையது.
சைவசமயம் ஆகமச்சைவத்தையும் அடக்கியது. கபாலிகம், வைரவத்தையும் அடக்கியது. செல்வச்சந்நிதி, கதிர்காமமும் சைவம்தான். மாவிட்டபுரமும் சைவம்தான். முனியப்பரும் சைவம்தான். கண்ணகித்தாயும் சைவம்தான். பூவும் நீரும் சைவம்தான். கடா பலியிடலும் சைவம்தான். சிதம்பரத்தாரும் மதுரையாரும் சைவம்தான். சுடுகாட்டுச் சிவனாரும் சைவம்தான்.

சைவசமயம் என்பது வெறுமனே சித்தாந்த சைவசமயம் அல்ல! கபாலிகம், வைரவம் என்று பல்வேறு அகச்சமயங்களுக்கும் சைவப்பெருஞ்சமயம் பொதுவாகும். மீனினைச் சிவபெருமானுக்கு அளித்துவந்த
அதிபத்தர் நாயனாரும் சைவசமயிதான்.

எல்லாச் சந்தர்ப்பமும் ஆகமச்சைவத்துக்கு ஆதரவாயிருக்குமென்றில்லை. ஐரோப்பிய காலனித்துவக்காலத்தில் குலதெய்வவழிபாட்டுச் சைவம்தான் எங்கள் மரபுகளை ஏழை மக்களிடம் கட்டிக்காத்ததென்ற வரலாற்றையும்,
வடகிழக்கைத் தாண்டிவாழும் தமிழர் இன இருப்பை பாதுகாத்துவரும் ஒரே அரண் குலதெய்வவழிபாடே என்பதையும் நம்தமிழர் உணர்வார்களாக!

சைவசமயம் என்னும் பெருஞ்சமயம் பல்வேறு அகச்சைவசமயங்களையும் சைவப்பிரிவுகளையும் உடைய பெருஞ்சமயம். அப்பல்வகைமையை ஆகமச்சைவத்தினால் அழிக்க முயற்சிக்காதீர்!!!
எனவே, சைவசமயத்தின் பல்வகைமையைப் பாதுகாப்போம். தமிழர்குடியைக் கட்டிக்காப்போம்!

கட்டுரையாளர்:
மருத்துவர் கி.பிரதாபன் (தலைவர்- இலங்கை சைவநெறிக் கழகம்)

 


Recommended For You

About the Author: Editor