நாடாளுமன்றத்தில் வைகோவின் ஆக்ரோஷம்!

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் ஆக்ரோஷமான பேச்சு மீண்டும் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா என்கிற எதிர்பார்ப்பு, அவர் மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டபோது எழுந்தது.
அன்றைக்கு விடுதலைப்புலிகள் விவகாரம் தமிழ்நாட்டின் பிரதான பிரச்னையாக இருந்தது.

வைகோ

வைகோ

“நீங்கள், இந்து ராஷ்டிரவெறியர்கள். உங்கள் கூச்சலுக்கு நான் அஞ்சமாட்டேன். இந்தியை எதிர்த்து இந்திய அரசியல் சட்டத்தை எரித்து ஜெயிலுக்குப் போனவன் நான்!” – 23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவையில் வைகோவின் ஆக்ரோஷக் குரல் மீண்டும் இப்படித்தான் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. தி.மு.க-வில் வைகோ இருந்தபோது, அந்தக் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வந்த நேரம். விடுதலைப்புலிகள் விவகாரத்தில், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் வைகோவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. ஒருகட்டத்தில், வைகோவின் பேச்சை அலட்சியம் செய்தவராக ராஜீவ் காந்தி அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றார். அப்போது பேசிக்கொண்டிருந்த வைகோ, `மிஸ்டர் ராஜீவ் காந்தி! ஓடாதீர்கள்… என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுப் போங்கள்’’ (Mr. Rajiv Gandhi don’t runaway. Answer my question and then go!) என்று பிரதமர் பெயரைச் சொல்லி அழைத்து அதிரவைத்தார். வைகோ-வின் அன்றைய அனல்பறக்கும் பேச்சால் அவரை, ‘நாடாளுமன்றத்தின் புலி’ என்று தி.மு.க-வினர் உச்சி முகர்ந்து கொண்டாடினார்கள்.
வைகோ

வைகோ
அந்த ஆக்ரோஷமான பேச்சு, மீண்டும் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா என்கிற எதிர்பார்ப்பு அவர் மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டபோது எழுந்தது. குறிப்பாக, அன்றைக்கு விடுதலைப்புலிகள் விவகாரம் தமிழ்நாட்டின் பிரதான பிரச்னையாக இருந்தது. அதை, வைகோ லாகவமாகக் கையாண்டதால் பெரிதும் பேசப்பட்டார். ஆனால், அன்றைய நிலை இப்போது இல்லை; வைகோ பழைய அளவிற்குச் செயல்படமுடியாது என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், கடந்த சில நாள்களாகவே நாடாளுமன்றத்தில் அவரின் பேச்சு மீண்டும் வைகோ-வை தனித்துவமாக அடையாளப்படுத்திவருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில், அவரது ஆக்ரோஷ எதிர்ப்பைக் கண்ட மத்திய அமைச்சர் அமித் ஷா, “வைகோ-வை பேச அனுமதியுங்கள்” என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார். அவரது பேச்சைக் கண்ட ம.தி.மு.க-வினர், 20 ஆண்டுகள் கடந்தும் வைகோவின் ஆக்ரோஷம் இன்னும் குறையவில்லை என்று பெருமிதப்படுகிறார்கள்.
1996-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்தபிறகு, 2019-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி, மாநிலங்களவை உறுப்பினராக அந்த அவைக்குள் காலடி எடுத்துவைத்துள்ளார், வைகோ. பதவியேற்ற முதல் நாளிலேயே, கேள்வி நேரத்தின்போது ஜவுளித்துறை தொடர்பான துணைக்கேள்வியை எழுப்பினார். “23 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அவையில் கன்னி உரையாக எனது முதல் துணைக் கேள்வியை எழுப்ப வாய்ப்பு தந்ததற்கு நன்றி” என்று ஆரம்பிக்க, அப்போது அவையிலிருந்த பிரதமர் மோடி மேஜையைத் தட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மோடி - வைகோ

மோடி – வைகோ
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று, தனது கன்னிப்பேச்சை ஆரம்பித்த வைகோ, “1978-ம் ஆண்டு மே 2-ம் நாள், மத்திய – மாநில உறவுகள்குறித்த தனிநபர் மசோதா ஒன்றில் கன்னி உரை ஆற்றினேன். 23 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க தலைவரும் என்னுடைய அன்புச் சகோதரருமான மு.க.ஸ்டாலின், பெருந்தன்மையோடும் பேரன்போடும் என்னை இந்த அவைக்கு அனுப்பிவைத்திருக்கிறார். இந்த அவையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா, ஓர் அடக்குமுறைச் சட்டமாகும். மனித உரிமை ஆர்வலர்கள், சிறுபான்மை மக்கள், இந்த அரசை எதிர்ப்பவர்களின் குரல்வளையை நெரிக்கிற சட்டம் ஆகும்.
நான் மிகுந்த வேதனையோடு குறிப்பிட விரும்புகிறேன். முன்பு, யாரெல்லாம் இதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டார்களோ, அவர்களே ஆட்சிக்கு வந்தபிறகு இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்தார்கள் என்பதுதான் வேதனை. ஏற்கெனவே, வாஜ்பாயால் கொண்டுவரப்பட்ட பொடா சட்டத்தின்கீழ் இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். 19 மாதங்கள் சிறையில் இருந்தேன்.
வைகோ பேச்சு

வைகோ பேச்சு
இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின்படியும், சர்வதேச நாடுகள் கலந்துகொண்ட பல்வேறு மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டதற்கு இணங்கவும், இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதாக மக்களவையில் அரசு கூறியிருக்கிறது. இந்த சட்டத் திருத்தம் எந்த ஒரு தனிமனிதனையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கே பயன்படும்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘உங்கள் மனத்தில் அச்சமிருந்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்’ என்று கேட்டிருக்கிறார். ஆனால், அச்சத்தைப் போக்கவேண்டிய அரசே இன்று மக்கள் மனங்களில் அச்சத்தை விதைத்துவருகிறது. எந்தவொரு சட்டமும் மனித உரிமைக் காவலர்களையும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களையும் மேலும் அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது.
இந்தச் சட்டம், தனிநபர்களைக் குறிவைக்கிறது. அவர்களை, ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்துகிறது. இது, இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்தச் சட்டத்தின் வாயிலாக மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்புதான். ஆனால், ‘இந்தியா ஒரே நாடு’ என்ற கருத்தை இந்த அரசு திணிக்க முற்படுகிறது. அது, இந்திய ஒற்றுமைக்குக் கேடானது. இந்த நாடு, அமெரிக்க ஐக்கிய நாட்டைப் போன்று ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ United States of India என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று 16 நிமிடங்கள் பேசினார்.
வைகோ பேசிமுடித்ததும், நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் வைகோவிற்கு சாக்லேட் கொடுத்து வாழ்த்தினார்.
அதேபோல், இந்திய மருத்துவ ஆணைய மசோதா விவாதத்திற்கு அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இந்தியில் பதிலளித்தார். உடனே எழுந்த வைகோ, “மருத்துவம் குறித்த விவாதத்தில் சில சொற்களை ஆங்கிலத்தில்தான் சொல்லமுடியும். ‘நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள்’ ” என்று சொன்னதும், அமைச்சரும் ஆங்கிலத்தில் பேசினார். உடனே வடமாநில உறுப்பினர்கள், “ஹிந்தியில் பேசுங்கள்” என்று கூச்சலிட்டனர். மறுபுறம் வைகோ, “இந்தியில் பேசக்கூடாது. உங்களுக்கு இந்தி வேண்டுமா… இந்தியா வேண்டுமா” என்று கேள்வியை எழுப்பினார்.
முதல்நாள் நாடாளுமன்றத்தில் வைகோ

முதல்நாள் நாடாளுமன்றத்தில் வைகோ
பி.ஜே.பி உறுப்பினர்கள் வைகோவைப் பார்த்து, “தேசவிரோதி” என்று முழங்க, டென்ஷனான வைகோ, “ஒழியட்டும்… ஒழியட்டும்… இந்தி ஆதிக்கம் ஒழியட்டும்” என்று கோஷமிட்டார். வைகோவின் பேச்சால் மோதல் உருவாகும் நிலை வந்ததும், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, “இங்கு இந்தித் திணிப்பும் இ்ல்லை… எதிர்ப்பும் இல்லை” என்று சொல்லி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல், முத்தலாக் சட்டத் திருத்தம் கொண்டுவந்தபோதும் வைகோ, “இந்த நாள் வெட்கத்திற்கும் வேதனைக்கும் உரிய நாள்” என்று முழக்கமிட்டார்.
திங்கள் அன்று காலை, காஷ்மீர் மாநில சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த அடுத்த நிமிடம், தனது இருக்கையிலிருந்து எழுந்து முன்னே வந்து, தொடர்ந்து கூச்சலிட்டார் வைகோ. “நான் இப்பிரச்னையில் காங்கிரஸ் கட்சியோடு மாறுபடுகிறேன். என்னைப் பேச அனுமதிக்க வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தவே, முன்வரிசையில் இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “வைகோவைப் பேச அனுமதியுங்கள். அவர் கருத்தை நாங்கள் கேட்கிறோம்” என்று சொன்னதும், வெங்கையா நாயுடு, வைகோவைப் பேச அனுமதித்தார். வைகோ பேச்சின் ஆரம்பம் முதலே ஆக்ரோஷம் வெளிப்பட்டது. “காங்கிரஸ் கட்சிதான் காஷ்மீர் மக்களின் தலைவிதியோடு மோசடி நாடகம் நடத்தியது. காஷ்மீர் பிரச்னை இப்படி வெடிப்பதற்கே, காங்கிரஸ் கட்சிதான் காரணம். பண்டித நேரு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
வைகோ -வெங்கய்ய நாயுடு

வைகோ -வெங்கய்ய நாயுடு
பாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே சற்றுநேரத்துக்கு முன், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க உறுப்பினர்கள் அவரைத் தாக்கினர். நசீர் அகமதுவை மாநிலங்களவைக் காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே கொண்டுசென்றனர். இந்தப் பிரச்னையில், அவர் இந்திய அரசியல் சட்டத்தை இங்கே தீ வைத்துக்கொளுத்தியிருந்தாலும் முதல் ஆளாக வரவேற்றிருப்பேன். நான் இந்திய அரசியல் சட்டத்தின் இந்தி மொழிப் பிரிவை தீயிட்டுக் கொளுத்தியவன்.
காஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாரதிய ஜனதா இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவற்றைச் செய்துவிட்டது. இந்த மசோதாவை, அடிமுதல் நுனிவரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டது” என்று மத்திய அரசைக் கண்டித்து கடுமையாகப் பேசினார், வைகோ.

Recommended For You

About the Author: Editor