இந்திய மீடியாக்களில் பெண்களின் நிலை!- ஐ.நா ஆய்வு விவரம்!!

6 முன்னணி ஆங்கிலப் பத்திரிகைகளில் 2,963 செய்தியாளர்கள் பணி புரிகின்றனர். இதில், கால் பங்குகூட பெண்கள் கிடையாது.

சமீபத்தில், விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் உருவாக்கத்தில் பெண்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். விண்வெளித் துளையில்கூட பெண்கள், ஆண்களுடன் போட்டி போட்டுவிட முடியும். ஆனால், பத்திரிகைத் துறையில் பெண்கள், ஆண்களை மிஞ்சிவிட முடியாத சூழல் நிலவுகிறது.

இந்தியாவின் முக்கிய மீடியா நிறுவனங்களில், பெண்களுக்கு போதுமான உரிமை மறுக்கப்படுவதாக ‘பாலின சமத்துவம் இல்லாத இந்திய மீடியா’ என்கிற தலைப்பில் ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இணையதளங்களில் 25.3 சதவிகிதம், தொலைக்காட்சிகளில் 20.9 சதவிகிதம், இதழ்களில் 13.6 சதகிவித பெண்கள், தலைமை பதவிகளில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, எடிட்டர் இன் சீஃப், மேனேஜிங் எடிட்டர், எக்சிகியூட்டிவ் எடிட்டர், பியூரோ சீஃப், இன்புட் மற்றும் அவுட்புட் எடிட்டர்கள் போன்ற பொறுப்புகளில் உள்ளனர். இந்தியாவின் முன்னணி 7 இந்திப் பத்திரிகைகள், 6 ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒரு பெண்கூட தலைமைப் பதவியில் இல்லை” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு லைஃப் ஸ்டைல், ஃபேஷன் போன்ற எளிதான விஷயங்களைச் செய்தியாக்கும் பணியே அதிகம் தரப்படுகிறது. அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், கிரைம் போன்ற துறைகளை ஆண்கள் எடுத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர். 6 முன்னணி ஆங்கிலப் பத்திரிகைகளில் 2,963 செய்தியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில், கால் பங்குகூட பெண்கள் கிடையாது. 17,312 கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இதில், பெண் செய்தியாளர்கள் எழுதியது 20 சதவிகிதமே. 457 கட்டுரைகள் பாலின சமத்துவம் பற்றிப் பேசுகின்றன. இந்தக் கட்டுரைகளில் 39.6 சதவிகிதம் பெண்கள் எழுதிய கட்டுரைகள்.

இந்திப் பத்திரிகைகளில் பெண்களின் நிலை இன்னும் மோசம். இந்தியாவின் மிக முக்கியமான 6 இந்திப் பத்திரிகைகளில் 2,084 செய்தியாளர்கள் பணியாற்றுகின்றனர். அதில், 17 சதவிகிதம் பேரே பெண்கள். அதிலும், 11 சதவிதம் பேருக்குதான் `பைலைன்’ எனப்படும் பெயருடன் செய்திகள் வெளியிடும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மீடியாக்களில், பெண்களின் நிலை சற்று பரவாயில்லை. டிஜிட்டல் மீடியாக்களில், ஆண்களைவிட பெண்கள் அதிக கட்டுரைகள் எழுதுகின்றனர். அரசியல், கிரைம், கலாசாரம், பொழுதுபோக்கு போன்ற பிரிவுகளில் டிஜிட்டல் மீடியாக்களில் பெண்கள் வெளுத்துவாங்குகின்றனர். டிஜிட்டல் மீடியாக்களில் பெண்களுக்கு தாராளமாக பைலைனும் கிடைக்கிறது.

2018-ம் ஆண்டு, இந்திய ரீடர்ஷிப்பை முன்வைத்து 13 இந்திப் பத்திரிகைகள், 6 ஆங்கிலப் பத்திரிகைகள், 11 இணையதளங்கள், 5 ரேடியோ நிறுவனங்கள், பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor