கடற்கரையில் பாறை உருண்டு விழுந்ததில் மூன்று அமெரிக்க பெண்கள் பலி

அமெரிக்க கடற்கரையோரத்தில் இருந்த பாறையொன்று திடீரென உருண்டு விழுந்த அனர்த்தத்தில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த பெண்ணான அன்னே கிளாவ் (வயது 35) மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் அந்த நோயில் இருந்து அவர் விடுபட்டார்.

இதனை கொண்டாடும் விதமாக அவர் தனது குடும்பத்தினருடன் சான்டியாகோ நகரில் உள்ள கிராண்ட் கடற்கரைக்கு சென்றிருந்தார். அங்கு அவர்கள் கரையோரத்தில் பாறைக்கு கீழ் குடைகளுடன் அமைக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்து, கடலின் அழகை ரசித்துக்கொண்டிருந்தனர்.

அப்போதும் யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த பாறை திடீரென உருண்டு விழுந்தது. இதில் அன்னே கிளாவ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாறைக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த விபத்தில் அன்னே கிளாவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது தாய் மற்றும் உறவினரான பெண் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்