
கலகொட அத்தே ஞானசார தேரரருக்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) குறித்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் குறித்த வழக்கு டிசம்பர் 2 ஆம் திகதி விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதவான் அறிவித்தார்.
இஸ்லாம் மார்க்கம் மற்றும் அல்குர்ஆன் ஆகியவற்றுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கிடைக்கப்பெறவில்லை என, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் அதிகாரிகள் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த வழக்கு தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு நினைவுப்படுத்தல் உத்தரவொன்றை நீதிபதி பிறப்பித்துள்ளார்.
பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு கூட்டங்களில், வெளியிடப்பட்ட கருத்துகள், இஸ்லாம் மார்க்கம் மற்றும் அல்குர்ஆன் ஆகியவற்றுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மானால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஞானசார தேரருக்கு எதிரான இந்த வழக்கினை குற்றப்புலனாய்வு பிரிவினர் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.