நல்லூர், இராணுவம் , பொலிஸ் கட்டுப்பாட்டில்.

நல்லூர் ஆலய சூழல் முழுமையான இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 01ஆம் திகதி வரையில் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
அந்நிலையில் ஆலயத்தின் பாதுகாப்பையும் , ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முகமாக ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் பொது போக்குவரத்திற்கு மூடப்பட்டு வீதி தடைகள் போடப்பட்டு , மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆலய சூழலில் இன்றைய தினம் விசேட தேடுதல் நடவடிக்கைகளை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்டு ஆலய சூழலை தமது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
ஆலயத்திற்கு வருவோரில் சந்தேகத்திற்கு இடமானவர்களை சோதனை செய்தவதற்கான சோதனை கூடங்கள் ஆலயத்திற்கு செல்லும் நான்கு வீதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.அதேவேளை இம்முறை ஆலய சூழலில் 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சுமார் 25 இலட்ச ரூபாய்க்கு மேல் யாழ்.மாநகர சபை செலவு செய்வதாக தகவல்கள் மூலம் அறிய கிடைத்துள்ளன.
நல்லூர் ஆலய சூழலில் 650 பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கான செலவீனமாக 20 இலட்ச ரூபாய் காணப்படுகின்றது.
நல்லூர் ஆலய சூழலில் உள்ள 5 பாடசாலைகளில் பொலிசார் தங்கியுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள பாடசாலைக்கான மின்சார கட்டணம் , இதர தங்குமிட செலவீனம் , தேநீர் , சிற்றுண்டி குடிதண்ணீர் போத்தல் என சுமார் 20 இலட்ச ரூபாய் செலவு ஏற்படும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
அதேவேளை 8 சோதனை கூடங்களை அமைப்பதற்காக 3 இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் வீதி தடைகளுக்கான செலவு என சுமார் 25 இலட்ச ரூபாய் பாதுகாப்புக்காக யாழ். மாநகர சபை செலவு செய்யவுள்ளது என தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

Recommended For You

About the Author: ஈழவன்