வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம்: பெயர் மாற்றம்!

வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் செயலிகளின் பெயரை மாற்ற ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதள நிறுவனங்களும் கடும் வளர்ச்சியை எட்டியுள்ளன.

இன்றைய இளைஞர்கள் மட்டுமல்லாமல் வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனர்களே இல்லை எனலாம். இந்த நிறுவனங்களின் வளர்ச்சியைக் கண்டு 2012ஆம் ஆண்டில் இன்ஸ்டகிராம் நிறுவனத்தையும், 2014ஆம் ஆண்டில் வாட்ஸ் அப் நிறுவனத்தையும் விலைக்கு வாங்கியது ஃபேஸ்புக்.

அதன்பின் இரு நிறுவனங்களையும் சுதந்திரமாகச் செயல்பட ஃபேஸ்புக் அனுமதித்திருந்தது.

இரு நிறுவனங்களுக்கும் தனி மேலாளர்கள், ஊழியர்கள், பணிமனைகள் என ஃபேஸ்புக்கின் தலையீடு இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளில் இரு நிறுவனங்களிலும் ஃபேஸ்புக் அதிகமாகத் தலையிட்டு வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராமின் பெயர்களை மாற்றப்போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் (ஆகஸ்ட் 3) உறுதிப்படுத்தியுள்ளது.

இரு செயலிகளின் பெயர்களுடன் ஃபேஸ்புக் என்ற பெயரையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்ஸ்டகிராமை “Instagram from Facebook” எனவும், வாட்ஸ் அப்பை “WhatsApp from Facebook” எனவும் பெயர் மாற்றம் செய்ய ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது. இரு நிறுவனங்கள் மீதும் ஃபேஸ்புக்குக்கு இருக்கும் உரிமையைப் பொதுவெளிக்கு உணர்த்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். இதன்படி, விரைவில் கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இன்ஸ்டகிராம், வாட்ஸ் அப்பின் பெயர்கள் மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பெயர் மாற்றம் தவிர, வேறு புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படுமா என்பது பற்றி ஃபேஸ்புக் நிர்வாகம் தகவல் வெளியிடவில்லை.


Recommended For You

About the Author: Editor