
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 6ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அவர் தெரிவிக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
அவருடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, அமைச்சர்களான சாகல ரத்நாயக மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 250 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தாக்குதல் குறித்து ஆராய சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் தலைமையிலான குறித்த விசேட தெரிவுக்குழுவின் விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன.
எதிர்வரும் 6ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் அமர்வுகளுடன் பிரதான விசாரணைகள் அனைத்துமே முடிவுக்கு வரவுள்ளன.
அதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த மாத நடுப்பகுதியில் தெரிவுக்குழுவின் விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவருவதுடன், எதிர்வரும் 23ஆம் திகதி அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவுக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.