இந்து சமயத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் உண்மையான பௌத்தர்கள் அல்ல

இந்து மக்களுக்கு எதிராக ஒரு சில பெளத்த பிக்குகள் செய்யும் அடாத்தான செயற்பாடுகள் பெளத்த மதத்தின் நிலைப்பாடாக அமையாது என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் கூறியுள்ளார்.

அத்துடன், இவ்வாறு அடாத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் உண்மையான பிக்குகளா என்ற சந்தேகமும் எழுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், “பெளத்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும் தலைமை இல்லை. தர்மம் தான் இரு மதங்களுக்குமே தலைமை.

மேலும் இந்த இரு சமயங்களுக்குமிடையில் பிரிவுகள் இல்லை. இந்து சமயத்தில் இருந்தே பெளத்த தர்மம் உருவானது. மேலும் பெளத்த சமயத்தின் காவல் தெய்வங்களாக இந்து சமயக் கடவுள்களே இருக்கின்றனர்.

எந்த விகாரைக்குச் சென்றாலும் இந்து சமயக் கடவுள்களைப் பார்க்கலாம். இந்நிலையில் இந்த இரு சமயங்களுக்குமிடையில் முரண்பாடுகள் திணிக்கப்படுகிறது.

அதற்கு ஒரு சில பெளத்த பிக்குகளே காரணம். அந்த ஒரு சில பெளத்த பிக்குகளின் செயற்பாடுகள் பெளத்த சமயத்தின் நிலைப்பாடாக அமையாது.

பெளத்த பீடங்களுக்குள் உள்ள பிரச்சினைகளினால் சில பெளத்த பிக்குகளின் செயற்பாடுகள் இந்து சமயத்திற்கு பங்கம் உண்டாக்குவதாக அமைந்துள்ளன. இவ்வாறான பிக்குகள் உண்மையில் முறையான பெளத்த பிக்குகள் தானா என்ற சந்தேகம் எழுகின்றது.

யாழ். நாக விகாரை வடக்கு தெற்கு மக்களுக்கிடையிலான உறவு பாலமாக அமைந்துள்ளது. அந்தவகையில் இந்து பெளத்த மக்களிடையில் நல்லிணக்கத்தை உண்டாக்கும் பொறுப்பை நாம் எடுப்போம். மேலும் யாழ். மாவட்டத்தில் பெளத்த சமயத்தின் பெயரால் இந்து சமயத்துக்கு பங்கம் விளைவிக்கப்படாது. அவ்வாறு விளைவிக்கப்பட்டால் அதனை நான் எதிர்ப்பேன்.

இந்து சமயத்தை பெளத்தர்களும், பெளத்த சமயத்தை இந்துக்களும் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்