புனித லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா!

121 வருடங்கள் பழமை வாய்ந்த மன்னார் – தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி அகஸ்டின் புஸ்பராஜ் தலைமையில் கொடியேற்றம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதில் அதிகளவான பக்த அடியார்கள் பங்கேற்றிருந்தனர்.

தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ள நவநாள் வழிபாடுகளைத் தொடர்ந்து 10ஆம் திகதி லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிறைவு பெறவுள்ளது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் எதிர்வரும் 10ஆம் திகதி காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் மிக தொன்மையான வரலாற்றினைக் கொண்ட ஆலயமாக தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயம் கருதப்படுகின்றது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது 250 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், காயமடைந்த 100 இற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலக சபை தெரிவித்துள்ளது.

நவநாள் வழிபாடுகளின் முதல் எட்டு நாட்களும் தலைமன்னாரைச் சேர்ந்த இளைஞர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், எதிர்வரும் 9ஆம் திகதி இரவு முதல் 10ஆம் காலை திருவிழா திருப்பலி நிறைவடையும் வரை பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor