ரஜினி – சிவா புதிய கூட்டணி?

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்திய, தமிழக அரசியல் குறித்து பேசினார்.

சட்டமன்றத் தேர்தல் வரும்போது அரசியல் கட்சி தொடங்கி பொதுத் தேர்தலை சந்திப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ள நிலையில் இந்த செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அரசியல் நுழைவு அறிவிப்பு ரஜினியின் திரைப் பயணத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடவில்லை. தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.

அதைத் தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுவருகிறார். நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்தப் படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி எழுந்தது.

ஏற்கெனவே கே.எஸ்.ரவிக்குமார் ரஜினிகாந்தை சந்தித்த நிலையில் நேற்று (மே 28) சிவா சந்தித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பின் இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றுள்ளது.

ஹெச்.வினோத், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரிடமும் கதை கேட்கப்பட்டுள்ளது. தர்பார் படத்தின் இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு இன்று (மே 29) மும்பையில் துவங்க உள்ளது.


Recommended For You

About the Author: Editor