முல்லையில் பாரிய சிங்கள குடியேற்றத்திற்கான முன் ஏற்பாடுகள்.- தடுக்க தவறும் தமிழ் தலைமைகள்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவைப்பிரிவுக்குட்பட்ட, தமிழ் மக்களின் பூர்வீக குளமான ஊரணிக் குளத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆக்கிரமித்திருந்தது.

இந் நிலையில் தற்போது இந்தக் குளத்தினை ஊடறுத்து மின்சார வேலி அமைக்கப்பட்டுவருகின்றது.

அத்தோடு குறித்த ஊரணி குளத்திற்குள்ளால் மின்சாரக் கம்பங்கள் நாட்டப்பட்டு வருவதுடன் வீதிளும் அமைக்கப்பட்டுவருகின்றது.

இச் செயற்பாடானது, புதிய சிங்களக் குடியேற்றத்திட்டத்திற்கான ஒரு ஆரம்பமாக இருக்கலாமென அப்பகுதித் தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த தமிழ் மக்களின் பூர்வீக ஊரணிக் குளத்தின் கீழ் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் காணப்படுகின்றன.

குறித்த ஊரணிக்குளத்தின் நீர்ப்பாசனத்தினைப் பயன்படுத்தி தாம் கடந்த 1984ஆம் ஆண்டு இடம்பெயர்வதற்கு முன்னர் நெற் செய்கையில் ஈடுபட்டதாகவும் அப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அக்குளம் சிதைவடைந்திருப்பதால், அந்தக் குளத்தின் கீழ் உள்ள விவசாய நிலங்களில் தாம் பெரும்போக மானாவாரிச் செய்கையினை மேற்கொள்வதாவும் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு ஊரணிக் குளத்தின் கட்டில் ஏற்ட்டிருந்த முறிப்பை, கடந்த 2015ஆம் ஆண்டு அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சீர்செய்ததாகவும்,

அந்த சீரமைப்பின் மூலம், ஏறத்தாள 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களுக்கு நீரைத் தேக்கிவைத்து பயன்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந் நிலையில் தற்போது இக்குளத்திற்கூடாக, மின்சாரவேலி, மின்கம்பங்கள், வீதி என்பன அமைப்பது தமது குளத்தினை இல்லாமற் செய்து புதிய குடியேற்றங்களை அமைப்பதனூடாக தமது வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதார நிலங்களும் பறிபோகும் அபாயத்தில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந் நிலையில் குறித்த அபகரிப்பு நிலைமைளை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் 01.08.2019 இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன், உரிய இடங்களில் இது தொடர்பில் பேசுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த ஊரணிக் குளத்தின் அருகே தமிழ் மக்கள் 1984ஆம் ஆண்டுக்கு முன்னர் வழிபட்டதாக கூறப்படும் காளி கோவில் ஒன்று சிதைவடைந்திருப்பதுடன், அவர்கள் பயன்படுத்தியதாக் கூறப்படும் பழைய கிணறும் பாழடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


Recommended For You

About the Author: ஈழவன்