மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட வீதிக்கு கம்பரேலிய பெயர் பலகை – ஊழல் என மக்கள் சந்தேகம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட வீதிக்கு கம்பரேலியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது என பெயர் சூட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது ஏன் என  மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி சந்தியிலிருந்து உடுத்துறை குடியிருப்பு பகுதிக்கு செல்கின்ற வீதி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புனரமைப்பு செய்யப்பட்டன.

இந்த வீதியானது சுமார் 400 மீட்டர் வரை நன்கு செப்பனிடப்பட்டு தற்போதும் எந்தவித சேதங்களும் இன்றி நன்றாகவே உள்ள நிலையில் அதன் தொடர்ச்சி சில இடங்களில் சுமார் ஐம்பது மீட்டர் இடை இடையே பழுதடைந்துள்ளது.அந்த வீதியை கம்பரலிய திட்டத்தின் கீழ் சுமார் 20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகம் அங்கு விளம்பர பலகை ஒன்றை ஒப்பந்தகாரர் ஊடாக அதுவும் நள்ளிரவில் நாட்டியிருந்தனர்.

இதனை அறிந்து பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை செய்த நிலையில் அதனைக் கேள்வியுற்ற வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகம் அந்தபெயர் பலகையை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் பட்டப்பகலில் அகற்றி சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் அவர்களுடன் தொடர்பு கொண்டபோதும் பிரதேச செயலர் அவர்கள் ஒரு கலந்துரையாடலில் இருப்பதால் பேச முடியாது என்றும் தெரிவித்த நிலையில் தகவல் அதிகாரியாக இருக்கின்ற வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் அவர்களிடம் கேட்டபோது

இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் திட்டமிடல் பிரிவுடனேயே இது தொடர்பில் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வட கிழக்கு பிரதேச திட்டமிடல்செயலகத்துடன் தொடர்பு கொண்ட போது அதற்குப் பொறுப்பான அதிகாரி இவ்வாறு பதில் அளித்திருந்தார்.

அந்த வீதியானது இனிமேல் தான் அமைக்கப்பட உள்ளது என்றும் அதனால் முன்னரே தாங்கள் அந்த பெயர் பலகையை நாட்டியதாகவும் தாங்கள் அந்தப் பெயர் பலகை தொடர்பான விளம்பர மாதிரியை மின்னஞ்சலில் அனுப்பியதாகவும் குறித்த ஒப்பந்தகாரர் அதை அச்சிட்டு அங்கு நாட்டியதாகவும் தெரிவித்தார்.

அதுசரி நாட்டிய பெயர்பலகை ஏன் அகற்றினீர்கள் என்று கேட்டதற்கு அது தனக்கு தெரியாது அதை சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரரிடமே கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார் மேலும் இந்த வீதியில் நல்ல நிலையிலே உள்ளது ஏன் இதனை மீளமைக்க முயற்சிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த வீதியானது எங்கு உள்ளது என்று தனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சில மணி நேரங்களின் பின்னர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அதனாலேயே ஒப்பந்தம் எடுத்தவர் விளம்பர பலகையை போட்டுள்ளதாகவும் அதற்கு தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த வீதியானது மிகவும் தரமான நல்ல நிலையில் உள்ளது இடையிடையே சுமார் 50 மீட்டர் வரை பழுதடைந்த மட்டுமே காணப்படுகிறது இந்த நிலையில் இந்த பெயர் பலகை நாட்டப்பட்டது மறுநாள் மதியம் பிடுங்கப்பட்டதன் காரணம் என்ன என்பது மக்கள் விமர்சனமாக உள்ளதுடன் இது தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்


Recommended For You

About the Author: ஈழவன்