பொலிஸ் பாதுகாப்புடன் கள்ளமண் அகழ்வு

கிளிநொச்சி ஊரியான் – கனகராயன் ஆற்றுப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கும் பொலிசாருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஊரியான் கனகரான் ஆற்றுப்பகுதியிலும் ஊரியான் குளத்தின் கீழான வயல்நிலங்களிலும் கடந்த இரண்டு மாதங்களிற்கும் மேலாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் கடல் நீர் உட்புகுந்து விவசாய நிலங்கள் உவராகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெற்று வரும் மணல் அகழ்வை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், இதுவரை இதனைக்கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கைகளையும் பொலிசார் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

இப்பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வுகள் தொடர்பில் கடந்த 11ம் திகதி கண்டாவளைப் பிரதேச செயலாளர் ரீ.பிருந்தாகரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றினையும் சுமார் 75 கியூப் மணலையும் அன்றைய தினம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்திருந்தனர்.

இந்த நிலையில் ஒரிரு நாட்கள் குறைவாக காணப்பட்ட சட்டவிரோத மணல் அகழ்வுகள் தற்போது அதிகரித்தே காணப்படுகின்றது.

நேற்றைய தினம் குறித்த பகுதியில் சுமார் நூறு கியூப்பிற்கும் அதிகமான மணல் வெளியிடங்களுக்கு டிப்பர் வாகனங்களில் கொண்டு செல்லும் நோக்கில் குவிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் கண்டாவளைப் பிரதேச செயலாளரால் பொலிசார் மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அத்துடன், பிரதேசத்தில் உள்ள கிராம மட்ட அமைப்பின் பிரதிநிதியொருவரினால் நேற்று மாலை 6.00 மணி முதல் இரவு 10.54 வரையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் நிலையான தொலைபேசி இலக்கம் ஊடாகவும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான விசேட குற்றத்தடுப்பு பொலிசாருக்கும் தகவல்களை வழங்கியபோதும் மேற்படி குவிக்கப்பட்டிருந்த மணல் அனைத்தும் ஏற்றிச்செல்லப்படும் வரையும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்பது தொடர்பில் பொலிசாருக்கும் மணல் அகழ்விற்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையில் மாவட்டசெயலகத்தில் நடைபெற்ற முறையற்ற மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலில் பொலிஸ் உயரதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor